செவ்வாய், 21 மே, 2013

மகி குட்டியின் பேரங்கள் !


ஒரு மிட்டாய்க்கு
ஒரு எச்சில் முத்தம்
உயரே கிடக்கும் பொம்மையை எடுக்க
எப்போதேனும் ஒரு செல்ல கடி -என
அவள் சின்ன பேரங்களில்
லாலிபாப்பை விட்டுத்தரும்
பெரும் லாபங்கள் -கேட்காமலே வாய்க்கும்
என் விழியோரம் நீர் நிறையும் கணங்களில் !
                                                                    கஸ்தூரி 

வெள்ளி, 17 மே, 2013

தா (மன் )மத வருகைகள்


கண்ணுக்கு மையெழுதி
உதட்டுக்கு சாயமிட்டும்
பூர்த்தியடையாத உன்னழகு
மூக்கு நுனியில் சிறிது
கோபம் தீட்டியபின்
முழுமை அடைவதால்
திட்டமிட்டே நிகழ்கிறது
என் தாமத வருகைகள் !!!!
                                    கஸ்தூரி 

வியாழன், 16 மே, 2013

மறதி


மழை தூறத் தொடங்கியதும்
நினைவுக்கு வரும்
மொட்டை மாடி வடகம்
கொடியில் காயும் துணிகள்
சாத்தபடாத சாளரங்கள்
துண்டிக்க வேண்டிய
கேபிள் வயர் !
மறந்து போனது ஒன்றைத்தான்
கற்பனை ஊற்றெடுக்க
கவிதை புனையும் கலை !
                      கஸ்தூரி 

பின்விழைவு

என் நேற்றைய தினம்போல்
எறும்பின் வரிசையில்
உன் வரவை போல்
யார் விரல் வைத்தது !!!!!கஸ்தூரி

வெள்ளி, 10 மே, 2013

நீ

நீ மட்டுமே நீ
என்று தெரிந்த பொழுது
நீயாகியிருந்தேன் நான் !!!-கஸ்தூரி


திங்கள், 6 மே, 2013

வாதிகள் (வியாதிகள் )

அடி வாங்கும் இனத்தில்
பிறந்தவள் நான்
வலிக்கிறது என்றேன்
வாய் திறந்து
நான் பெண்ணியவாதியாம் !
வலித்திருக்கும் என்ற
என்  அண்ணன்
தீவிரவாதியாம் !
நான் அடி வாங்குகையில்
அண்டை வீட்டாருடன்
அயலான் போல் வேடிக்கை
பார்த்துக்கொண்டிருந்த என்
பங்காளிகள் தன்
தேசியவாதிகளாம் !!!!!
                                கஸ்தூரி


கல்

நீயும் ,நானும் கல் தான்
என் குளத்தில் விழுந்த
கல்லாய் நீ !
உன் சோற்றில் சிக்கிய
கல்லாய் நான் !